திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகனால் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ராஜகோபால் மீது அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. காவல் நிலையத்திற்குத் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்துப் பாதுகாப்பு தேடி வரும் பெண்களிடம் அவர் அநாகரிகமாகப் பேசுவதையும், அவர்களிடம் எல்லை மீறி நடப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர் வாட்ஸ்அப் மூலம் சாட்டிங் செய்த உரையாடல்கள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாட்ஸ்அப் சாட்களில், “உனது புடவையுடன் கூடிய புகைப்படத்தை எனக்கு அனுப்பு” என்றும், அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்தபோது, “உன்னிடம் கேட்காமல் நான் வேறு யாரிடம் கேட்பது” என்றும் அநாகரிகமாகப் பேசிய விபரங்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன. பாதுகாப்பு கோரி வரும் பெண்களைத் தனது காம இச்சைக்கு இணங்க வைக்க முயற்சி செய்த இந்த அதிகாரியின் முகத்திரை தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த ஒரு பெண் மட்டுமல்லாமல், காவல் நிலையத்திற்கு வந்த இன்னும் பல ஏழை, எளிய பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
காவல்துறையினரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த இந்த அதிகாரி மீது வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் போதாது என்றும், அவர் மீது துறை ரீதியான கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையிலேயே, பாதுகாப்பு தேடி வந்த பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிகாரியின் இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
