தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன. தவெக தலைவர் விஜய் தலைமையில் கட்சி தொடங்குவதற்கு முன்பாக 2023-ஆம் ஆண்டிலும், கட்சித் தொடக்கத்திற்குப் பின் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளிலும் இந்த விருது வழங்கும் விழாக்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் உள்ளிட்ட பலருக்கு மேடையில் தவெக தலைவர் நேரில் விருது வழங்கி கௌரவித்தது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது.
தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அனைவரின் கவனமும் தவெக-வின் மூன்றாமாண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் மேடையில் பேசும்போது, “அடுத்த முறை முதலமைச்சர் கையில் விருது வாங்குவோம்” எனக் கூறியதுபோலவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதனால், இதுவரை கட்சித் தலைவராக விருதுகளை வழங்கி வந்த விஜய், இந்த முறை முதன்முறையாக மாநிலத்தின் முதலமைச்சராக மாணவர்களுக்கு விருதுகளை வழங்கவிருப்பது பெரும் சுவாரஸ்யத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் கல்வி விருது வழங்கும் விழாவை வருகின்ற ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை முதலமைச்சர் விஜய் பங்கேற்பதால், விழா வழக்கத்தை விடக் கூடுதல் பாதுகாப்புடனும், மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடனும் நடத்தப்படவுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் தரவுகளைச் சேகரிக்கும் பணியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கட்டமாக விருதுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
