தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அரசியல் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட இந்த 25 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அதிமுக தரப்பு ஏற்கனவே மனு அளித்துள்ளது. இந்தச் சூழலில், புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள், தற்போது எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த 25 எம்.எல்.ஏக்களும் மீண்டும் அதிமுகவிற்கே திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தொடங்கியுள்ளன. தங்களுக்குப் பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று வேலுமணி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, “முதலில் அனைவரும் சபாநாயகர் முன்பு மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும், அதன் பிறகே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை” என்று கடுமையான நிபந்தனையை விதித்துள்ளார். சட்டமன்ற விதிகளின்படி, கொறடா உத்தரவை மீறிய உறுப்பினர்களை கட்சித் தலைமை குறிப்பிட்ட காலத்திற்குள் மன்னித்தால் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும் என்பதால், இதற்கான அவகாசம் மே 28-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மறுபுறம், முதல்வர் விஜய் தரப்பிலிருந்து இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு வலைவீசப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “எம்.எல்.ஏ பதவி பறிபோனாலும் கவலைப்பட வேண்டாம்; தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிடுங்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் உங்களையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கிறேன்” என விஜய் தரப்பு அவர்களுக்கு அஷ்யூரன்ஸ் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தி, கூட்டணி ஆதரவு எதுவுமின்றி தவெகவை தனிப்பெரும்பான்மை கொண்ட அரசாக மாற்றும் புதிய அரசியல் கணக்கிலும் விஜய் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த இருமுனை அழுத்தங்களால் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. “மன்னிப்பு கடிதம்” கொடுத்து பதவியைக் காப்பாற்றிக் கொண்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு அதிமுகவிலேயே நீடிப்பதா, அல்லது எம்.எல்.ஏ பதவியை இழந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து தவெகவில் இணைந்து இடைத்தேர்தலைச் சந்திப்பதா என்ற இக்கட்டான முடிவை அவர்கள் எடுத்தாக வேண்டும். மே 28-க்குள் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடுக்கப்போகும் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியலில் அடுத்தகட்ட திருப்பத்தை ஏற்படுத்தப் போவது உறுதி.
