“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக சேவகர் துணிச்சலாகப் பதிலடி கொடுத்த காணொளியும் இணையத்தில் வெளியாகி, நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக சேவகரும் அறக்கட்டளை நிறுவனருமான அனூப் நௌடியால், முசோரி நோக்கித் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் சென்ற வாடகை காரில் இருந்து பிளாஸ்டிக் கோப்பை மற்றும் கரண்டிகள் ஜன்னல் வழியே வெளியே வீசப்பட்டதைக் கண்டுள்ளார்.

இதனைப் பார்த்துச் சும்மா இருக்க முடியாத நௌடியால், உடனடியாகத் தனது காரை நிறுத்திவிட்டு, சாலையில் சிதறிய குப்பைகளைக் கையில் எடுத்துக்கொண்டு முன்னால் சென்ற சுற்றுலாப் பயணிகளின் காரை அணுகினார். காரில் இருந்த நடுத்தர வயதுப் பெண்மணிதான் அந்தக் குப்பைகளை வீசியுள்ளார் என்பதை உறுதி செய்த அவர், அந்த நெகிழி கழிவுகளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தார். மேலும், எதிர்காலத்தில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி இயற்கையை மாசுபடுத்த வேண்டாம் என்றும், பொது இடங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைதியான முறையில் அவர்களுக்கு அறிவுறுத்தினார். அந்தப் பெண்மணி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, குப்பைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

   

இந்தச் சம்பவத்தை அனூப் நௌடியால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியாகப் பதிவிட்ட சில நாட்களிலேயே, அது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலானது. இந்தியர்களிடம் குடிமைப் பொறுப்பு மற்றும் பொதுச் சுத்தம் குறித்த விழிப்புணர்வு இல்லாததை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமரிசித்து வருகின்றனர். “இந்தியர்கள் நாட்டைத் தங்கள் சொந்த வீடாகக் கருதுவதில்லை” என்றும், “நமது கல்வி முறையில் வாழ்க்கைத் திறன்களையும் சமூகத் திறன்களையும் கற்பிக்கும் பாடங்கள் அவசியம் தேவை” என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. உத்தரகாண்ட் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களின் சூழல் அமைப்பைப் பாதுகாக்க, இதுபோன்ற குடிமை உணர்வு ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் அவசியம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.