தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு கூட்டணி ஆட்சியை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக் ஆகியவை தவெக கூட்டணி ஆட்சியில் இணைந்துள்ளன . இதில் காதர் மொய்தீன் திமுக கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்று கூறப்பட்டாலும், இவர்கள் இருவரும் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளனர். இதன் காரணமாக விசிகவின் சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபுவும் தற்போது கட்சியிலிருந்து விலகியுள்ளார் .
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபகால செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக பனையூர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப காலமாகத் தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது அரசியல் களத்திலும், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
