தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முஹமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மாவட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியதாகக் கூறினார். கடந்த ஆட்சிக் காலத் திட்டங்களின் குறைகளை ஆராய்வதை விட, தற்போதைய அரசு புதிதாக என்ன செய்யப் போகிறது என்பதில் கவனம் செலுத்தித் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அவர் உறுதியளித்தார்.
வேலைவாய்ப்புத் துறை இணையதளம் தொடர்பாகக் கடந்த ஆட்சியில் இருந்த குற்றச்சாட்டுகளைக் கலைந்து, இளைஞர்கள் எளிதாகப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி வேலைவாயப்பில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நிறுவனங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிறு குறு நிறுவனத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் வசதிகள் உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு, அவர்களின் திறன்களை மேம்படுத்தி முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். தொழிலாளர்கள் வேலைக்காக வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்க, அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்றார். இறுதியாக, தமிழகத்தில் நிலவும் மின்தடைப் பிரச்சினை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, துறை சார்ந்த அமைச்சர் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறி முடித்தார்.
