“பதவி காலி, தகுதி நீக்கம்”… எடப்பாடியிடம் சரணடையும் சி.வி.சண்முகம்?… அதிமுகவில் நள்ளிரவு திருப்பம்…. பின்னணியில் நடந்த ரகசிய டீல்….!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தது. மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்களும் தனித்தனியாகச் செயல்பட்டு வந்தனர். தவெக தலைவர் விஜய் சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு சி.வி.சண்முகம் அணி ஆதரவாக வாக்களித்தது, அதிமுகவிற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் அதிருப்தி குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

   

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பிற்குப் பலத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிகவின் வன்னியரசு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதன் மூலம் தமிழக அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கையான 35 இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால், இனி தங்களுக்கு வாய்ப்பில்லை என்பதை அதிருப்தி அணியினர் உணர்ந்துள்ளனர். மேலும், விஜய்யை ஆதரித்ததால் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து இருப்பதையும், நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளித்தது தவறு என்றும் அவர்கள் தற்போது வருத்தமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக, பிரிந்து கிடக்கும் இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான சமரசப் பேச்சுவார்த்தை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முக்கிய நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் சின்னங்கள் ஆணை 1968, பிரிவு 15-இன் கீழ், அதிமுகவின் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அதிருப்தியாளர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி தரப்பு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

   

மறுபுறம், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். விஜய்யை ஆதரித்ததற்காகத் தங்களின் ஆதரவு எம்எல்ஏக்கள் இழந்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். இதற்கிடையே, “அதிமுகவில் பிளவு இல்லை, தவெக அமைச்சரவையில் சேர எங்களுக்கு விருப்பமில்லை” என்று எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியிருந்தாலும், இருதரப்பு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு அதிமுக விரைவில் மீண்டும் ஒன்று சேருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.