பெங்களூரு மடிவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கல்லூரி மாணவி ஒருவர் ஹைனாஸ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிப் படிப்பிற்கு இடையே தனது ஓய்வு நேரத்தில், அம்மாணவி பகுதி நேரமாக மோமோஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மே 11 அன்று இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மோமோஸ் கடையின் உரிமையாளர்களான அதுல் மற்றும் கோஷ் ஆகியோர் கடையை விற்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான தரகராக ஹைனாஸ் என்பவர் அந்தப் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளார்.
இந்த வியாபாரப் பேச்சுவார்த்தை தொடர்பாக அதுல், கோஷ், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் ஹைனாஸ் ஆகியோர் ஒன்றாக இணைந்து மது விருந்து ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது, உணவு வாங்கி வருவதற்காக அதுல் மற்றும் கோஷ் ஆகிய இருவரும் சிறிது நேரம் வெளியே சென்றுள்ளனர். அந்த நேரத்தில், அறையில் தனியாக இருந்த மாணவியை ஹைனாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாணவி முதலில் காவல் நிலையத்தை அணுகியபோது, போலீசார் அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், உரிய ஆதரவோ, உடனடி உதவியோ வழங்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, மாணவி உயர் காவல் அதிகாரிகளை அணுகி முறையிட்டதை அடுத்து, அவர்களின் தலையீட்டால் மடிவாலா காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளி ஹைனாஸை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடை உரிமையாளர்களான அதுல் மற்றும் கோஷ் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
