ஒரே வீட்டில் அரங்கேறிய கொடுமை.. “எங்களை காப்பாத்துங்க” உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கதறும் இரண்டு சகோதரிகள்… புகுந்த வீட்டில் செய்த கொடுமை..!

By Swetha on வைகாசி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் தாத்ரி பகுதியில் உள்ள சிதேரா கிராமத்தைச் சேர்ந்த சோனம் பைஸ்லா மற்றும் மோனிகா பைஸ்லா ஆகிய இரு உடன்பிறந்த சகோதரிகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில காலத்திலேயே, கூடுதல் வரதட்சணை கேட்டு இவர்களது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் தங்களை கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதாக அச்சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இரு சகோதரிகளும் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் புகுந்த வீட்டினர் வரதட்சணை வெறி பிடித்தவர்கள் என்றும், எந்த நேரத்திலும் தங்களை அவர்கள் கொலை செய்யக்கூடும் என்றும் பயத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டில் உள்ள சிசிடிவி ஆதாரங்களை அழிப்பதற்காக டிவிஆர் (DVR) பெட்டியையும் அவர்கள் அகற்றிவிட்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர் லக்ஷ்மி சிங் ஆகியோருக்கு கைகூப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

இந்த விவகாரம் குறித்து தாத்ரி பகுதி உதவி காவல்துறை ஆணையர் (ACP) பிரஷாலி கங்வார் கூறுகையில், குடும்பத் தகராறு காரணமாக பெண்களின் கணவர்கள் தற்போது தனியாக வசித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பும் இந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் தாத்ரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இந்த வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.