நடிகர் விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, மிகக் குறுகிய காலத்திலேயே தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த இமாலய வெற்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இவருடைய இந்த அரசியல் வெற்றியைத் திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் பேட்டிகள் வாயிலாகப் பாராட்டி, தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ (GOAT) திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த இளம் நடிகையான மீனாட்சி சவுத்ரி, சமீபத்திய பேட்டி ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்துப் பெருமிதத்துடன் பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வெற்றியைப் பாராட்டியதோடு, அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும் அவர் அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் குணநலன்கள் குறித்துப் பேசிய மீனாட்சி சவுத்ரி, “முதலமைச்சர் விஜய் அவர்களைப் போல ஒரு ஒழுக்கமான மனிதரை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு காலை 7 மணிக்கு என்றால், அவர் சரியாக 7 மணிக்குத் தளத்தில் இருப்பார்; மற்றவர்களுடைய நேரத்திற்கு மதிப்பளிப்பவர். நம்மோடு இணைந்து பணிபுரிந்த ஒருவர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்த நிலையை அடைந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது; அவர் தொடர்ந்து வரலாறு படைத்து வருகிறார்” எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.
