ரஷ்யாவைச் சேர்ந்த மலையேற்ற வீரரான ருஸ்தம் நபீவ், எந்தவொரு செயற்கைக் கால்களும் இல்லாமல், வெறும் கைகளின் பலத்தைக் கொண்டு உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,848.86 மீட்டர்) தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மே 20, 2026 அன்று காலை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ரஷ்யக் கொடியை ஏற்றிய இவர், செயற்கைக் கால்கள் இன்றி வெறும் கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த உலகின் முதல் மலையேற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். எவரெஸ்ட்டின் மிக ஆபத்தான ‘கும்பு பனிப்பாறை’ (Khumbu Icefall) பகுதியைக் கடந்து கேம்ப்-1 பகுதியை அடைய இவருக்கு 15 மணிநேரம் ஆகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
ருஸ்தம் நபீவின் இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சோகம் மறைந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ராணுவ முகாம் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி, ருஸ்தம் தனது இரண்டு கால்களையும் நிரந்தரமாக இழந்தார். இந்த கோர விபத்து அவரது வாழ்க்கையை முடக்கிய போதிலும், அவர் சக்கர நாற்காலியோடு முடங்கிப் போக விரும்பவில்லை. தனது ஊனத்தை ஒரு தடையாகக் கருதாமல், மன உறுதியோடு மலைகளின் சிகரங்களை சவாலாக ஏற்று கைகளின் உதவியுடன் மலையேறத் தொடங்கினார். இதற்கு முன்பாக இவர் உலகின் 8-வது மிக உயர்ந்த மலையான ‘மனாஸ்லு’ மற்றும் ஐரோப்பாவின் ‘எல்ப்ரஸ்’ மலையையும் வெறும் கைகளால் ஏறி சாதனை படைத்துள்ளார்
எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிறகு, ருஸ்தம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இந்த வெற்றியை என்னை உற்றுநோக்கும் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த உலகிற்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், நம் உடலில் இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் போராட வேண்டும்; ஏன்னெனில், அதற்கான முயற்சி எப்போதும் வீண் போகாது” என்று குறிப்பிட்டுள்ளார். மனிதனால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ள இவருடைய விடாமுயற்சியும், அசாத்திய துணிச்சலும் இன்று உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
