தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தகட்டப் பரபரப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், விரைவில் டெல்லி செல்லவிருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. எனினும், அவரது பயணத்திற்கான அதிகாரப்பூர்வத் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் பின்னணியில் வெறும் அரசியல் ரீதியான சந்திப்புகள் மட்டுமின்றி, தமிழகத்தின் மிக முக்கியப் பொருளாதாரத் தேவைகளும், புதிய பட்ஜெட் தயாரிப்புக்கான நெருக்கடிகளும் அடங்கியுள்ளன என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
கடந்த திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிப்பதுதான் தற்போதைய புதிய அரசுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான நிதிச் சூழலை எப்படிக் கையாள்வது என்பது குறித்து, கடந்த வாரம் நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் அவசர ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நிலுவையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து, கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதுதான் ஒரே வழி என்று அதிகாரிகள் தரப்பில் திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் மத்திய அரசைச் சார்ந்திருக்காமல் இந்த நிதிச் சிக்கலைத் தீர்க்க மாற்று வழிகள் உள்ளதா என்று முதலமைச்சர் விஜய் தயக்கம் காட்டியபோதிலும், யதார்த்தமான பொருளாதாரச் சூழலைப் புரிந்து கொண்டு இறுதியாக அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சந்திப்பிற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நேரம் கிடைத்தவுடன், இந்தப் பயணத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டெல்லி நோக்கிய பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த டெல்லி பயணம் வெறும் நிதி கோருவதற்கான பயணமாக மட்டும் அமையப்போவதில்லை; மாறாக, அது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கியப் பயணமாக இருக்கும் என்கிறார்கள் தவெகவின் மூத்த நிர்வாகிகள். தமிழக அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்த்துக் கொண்டதற்காக, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தபோது, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். ஒருபுறம் பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் நிதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் காங்கிரஸ் தலைவர்களுடன் அரசியல் சந்திப்பு என இந்த முரண்பாடான நகர்வுகள் தமிழகத்திலும் டெல்லியிலும் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
