“என்னை ஓரங்கட்டிட்டாங்க” திமுகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி… பரபரப்பு குற்றசாட்டால் ஸ்டாலின் அதிர்ச்சி..!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ், திமுகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தனக்கு, சமீபகாலமாக மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் அதிகாரமும் தராதது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தற்போது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்தியின் பிடியில் சிக்கியிருப்பதை உணர்த்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய செல்வராஜ், தொழிலதிபர் டாலர் பாலசுப்பிரமணியன் என்பவரின் தலையீட்டால்தான் தனக்கு திருப்பூர் தெற்கு தொகுதி மறுக்கப்பட்டு, விருப்பமில்லாத பல்லடம் தொகுதி ஒதுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இஸ்லாமிய மக்களுக்கு கபர்ஸ்தான் நிலம் வழங்குவதைத் தடுத்ததில் இருந்தே இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும், கட்சித் தலைவர் திருப்பூர் வரும்போது தன் வீட்டில் தங்குவதை லாவகமாகப் பயன்படுத்தி அந்த தொழிலதிபர் தன்னை ஓரங்கட்டிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

   

இருப்பினும், எதிர்காலத்தில் திமுகதான் ஆட்சிக்கு வரும், மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார் என்று குறிப்பிட்ட செல்வராஜ், அதற்காகத் தன்னை பலி கொடுத்துக் கொள்வதாகக் கூறினார். தான் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லப் போவதில்லை என்றும், கட்சியில் பதவி இல்லாவிட்டாலும் கழகத்திற்கு உண்மையாக உழைக்கும் நபர்களுக்காகத் தொடர்ந்து வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.