CM விஜய் எங்கே இருக்காரு..? அவரை பார்க்கணும்… என் புருஷனை இழுத்துட்டு போயிட்டாங்க.. பெண்ணால் தலைமை செயலகத்தில் பரபரப்பு..!!

By Soundarya on வைகாசி 21, 2026

Spread the love

தலைமைச் செயலகத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் வந்து “முதலமைச்சர் விஜய் எங்குள்ளார்? அவரைப் பார்க்க வேண்டும்” எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் பதவியேற்று, பொறுப்புகளை ஏற்கும் வகையில் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த சமயத்தில் இந்தத் திடீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கிறிஸ்டல் என்ற அந்தப் பெண், புதுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, எவ்விதக் காரணமும் தெரிவிக்காமல் தனது கணவர் முருகேசனை அழைத்துச் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் (CM Cell) புகார் அளிக்க வந்த தன்னை, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, குற்றவாளியைப் போல நடத்துவதாகக் கூறி அவர் கண்ணீருடன் வாக்குவாதம் செய்தார். தனது கணவரின் பாதுகாப்புக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவே அங்கு வந்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

   

இதுகுறித்து தலைமைச் செயலகப் போலீசார் புதுக்கோட்டை காவல்துறையினரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதிய தகவல் வெளிவந்துள்ளது. கிறிஸ்டலின் கணவர் முருகேசன், வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்துள்ளதாகவும், அதுகுறித்த விசாரணைக்காகவே போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.