தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தரப்பைச் சேர்ந்த சிலர் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இத்தகைய சூழலில், புதுச்சேரி சட்டசபையில் காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவரது தாயாரும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியுமான அதிமுகவைச் சேர்ந்த லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் மார்ட்டின் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த லீமா ரோஸ் மார்ட்டினிடம், தவெக ஆட்சியில் நீங்கள் அமைச்சர் ஆவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், அது “இறைவனின் சித்தம்” என்று சூசகமாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அமைச்சரவையில் தாங்கள் 8 அமைச்சர் பதவிகளைக் கோரியுள்ளதாக யூடியூப் சேனல்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே, மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா, விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அதேபோல், புதுச்சேரி ரங்கசாமி அமைச்சரவையில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில், லீமா ரோஸ் மார்ட்டினும் அமைச்சராகக் கூடும் என்ற அரசியல் யூகங்கள் பலமாக இறக்கைக் கட்டிப் பறக்கின்றன.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், லீமா ரோஸ் மார்ட்டினை வாழ்த்தி சீர்காழி நகரம் முழுவதும் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெள்ளியங்கிரி புருஷோத்தமன் என்பவரால் ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டர்களில், “வறுமையை ஒழிக்க வந்த தாயே! தமிழகத்தின் எதிர்காலமே! எங்கள் அம்மா மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களை வாழ்த்துகின்றோம்” போன்ற அதிரடியான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர் அரசியல், தமிழக மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
