“என்னங்க சொல்றீங்க”… அவங்களே 14 பேராச்சே, ஆனா விழுந்தது 5 ஓட்டு….. ஆளுங்கட்சியை அலறவிட்ட ஸ்ரீரங்கம் வாக்குச்சாவடி ரிப்போர்ட்…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் திமுக வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைMethod பிடித்து திராவிட சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சூழலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட எஸ். துரைராஜ் 69,645 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள வாக்குச்சாவடி வாரியான விவரங்கள் திமுக தலைமைக்கு கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91-வது வாக்குச்சாவடியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதே சமயம், அதே வாக்குச்சாவடியில் அதிமுக 236 வாக்குகளும், தவெக 51 வாக்குகளும் பெற்று முன்னிலை வகிக்கின்றன. இதுமட்டுமன்றி, அருகிலுள்ள 87 மற்றும் 93-வது வாக்குச்சாவடிகளிலும் திமுகவுக்கு முறையே 42 மற்றும் 41 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆளுங்கட்சியாக இருந்த ஒரு பெரிய கட்சியின் வாக்கு வங்கி, சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த அளவிற்கு சரிவைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த விவகாரத்தில் திமுகவினரை மிகவும் அதிர்ச்சியடைய வைத்த விஷயம் என்னவென்றால், அந்த குறிப்பிட்ட 91-வது வாக்குச்சாவடியில் மட்டும் திமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் 14 பேர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தனர். அதுமட்டுமில்லாமல், அந்தப் பகுதியில் வார்டு செயலாளர், இளைஞரணி, மகளிரணி மற்றும் ஐடி விங் என 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பதவியில் உள்ளனர். இத்தனை நிர்வாகிகள் இருந்தும் கட்சிக்கு வெறும் 5 ஓட்டுகள் மட்டுமே விழுந்திருப்பதால், கட்சியின் சொந்த நிர்வாகிகளும், அவர்களின் குடும்பத்தினருமே கூட திமுகவிற்கு வாக்களிக்கவில்லையா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

   

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், “யார் செயல்படவில்லை, யார் கட்சிக்கு துரோகம் இழைத்தார்கள் என்பதை தலைமை தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என உள்ளூர் திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, இந்த வாக்குச்சாவடி குளறுபடிகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று சுருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்த்துள்ள இந்த ஒற்றை இலக்க வாக்கு விவகாரம், அக்கட்சிக்குள் தற்சமயம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.