கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல் பெட்டியில் வைத்துக்கொண்டு, கண்ணீர் மல்க போலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நீதி கேட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 13 அன்று, அவரது தாய் கிரிஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு செலுத்தப்பட்ட தவறான ஊசி காரணமாக கடுமையான தொற்று (Infection) ஏற்பட்டதாக விகாஸ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கினால், அவரது தாயின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி கையைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த ராணுவ வீரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு காவல் நிலையங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, இறுதியாக கமிஷனர் அலுவலகத்தை நாடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் தனது தாயின் கையோடு காவல் அலுவலகத்திற்கு வந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தைக் கண்ட போலிஸ் கமிஷனர், உடனடியாக இந்த விவகாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
