ஐபிஎல் 2026 நடப்புத் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற நேரலை நேர்காணலில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது விரக்தியைத் தாங்க முடியாமல் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணியின் தற்போதைய மோசமான நிலை குறித்து ஆவேசமாகப் பேசிய அவர், “நாங்கள் ஒரு தகுதியான சிறந்த அணி என்று குறிப்பிட்டுத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு தவிக்கிறது. தொடர் தோல்விகள் காரணமாக அணியின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடமிருந்து கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த மன உளைச்சலின் வெளிப்பாடே நேரலையில் அவர் காட்டிய இந்த விபரீத கோபம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்களால் பேசப்பட்டு வருகிறது.
ரிஷப் பண்ட்டின் இந்த ஆக்ரோஷமான நடத்தையும், லக்னோ அணியின் சொதப்பலான ஆட்டமும் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலும் தற்பொழுது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சோபிக்கத் தவறியதன் விளைவாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் அண்மையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் பின்னடைவுகள் பண்ட்டின் கிரிக்கெட் பயணத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
