கொரோனாவை விட கொடூரம்…. உடலுறவு மூலமும் பரவுகிறதா ஹண்டா வைரஸ்… மருத்துவ உலகையே அலறவிட்ட புதிய கண்டுபிடிப்பு… உலகமே அதிர்ச்சி…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

கொரோனா பெருந்தொற்றின் வடுக்கள் இன்னும் உலக மக்களின் மனதை விட்டு மறையாத நிலையில், ‘ஹண்டா வைரஸ்’ (Hantavirus) குறித்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ உலகிலும் உலக நாடுகளிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எலிகள் மற்றும் அவற்றின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ், தற்போது ‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி, 11 பேரை பாதித்து 3 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து தீவிரமாகக் கண்காணித்து வரும் வேளையில், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ‘ஸ்பீஸ் ஆய்வகம்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வு முடிவு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தென் அமெரிக்காவிற்குச் சுற்றுலாச் சென்று ‘ஆண்டீஸ்’ ரக ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்ட 55 வயது சுவிஸ் நபர் ஒருவர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அவரது ரத்தம், சிறுநீர் மற்றும் சுவாசப் பாதையிலிருந்து வைரஸ் முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், தொற்று ஏற்பட்டு 71 மாதங்களுக்குப் பிறகு (கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்) அவரது விந்து மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஹண்டா வைரஸின் ஆர்என்ஏ (RNA) மரபணுக்கள் அழியாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள கண்கள் மற்றும் விந்துப்பை போன்ற ‘இம்யூன் பிரிவிலேஜ்ட் சைட்’ (Immune privileged site) எனப்படும் பகுதிகளில், நோய் எதிர்ப்புச் சக்தியால் எளிதாக நுழைந்து கிருமிகளை அழிக்க முடியாது என்பதால், எபோலா மற்றும் ஜிகா வைரஸைப் போல ஹண்டா வைரஸும் இங்கு இத்தனை ஆண்டுகள் ஒளிந்து உயிர்வாழ்வது உறுதியாகியுள்ளது.

   

இந்த கண்டுபிடிப்பு ஹண்டா வைரஸ் உடலுறவு மூலமும் பரவக்கூடும் என்ற புதிய கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், ஆய்வாளர்கள் இதற்கு மாற்றுக்கருத்தையும் முன்வைக்கின்றனர். விந்தணுவில் வைரஸின் ஆர்என்ஏ மரபணு இருப்பதாலேயே அது மற்றவர்களுக்குப் பரவும் என்று அர்த்தமல்ல என கனடா பொதுச் சுகாதார முகமையின் நிபுணர் டேவிட் சஃப்ரோனெட்ஸ் தெரிவித்துள்ளார்; நோய் எதிர்ப்பு செல்கள் வைரஸைக் கொன்ற பிறகும், அதன் இறந்த உடலின் மரபணு பாகங்கள் அங்கு தங்கியிருக்கலாம் என்பதே அவரின் கருத்தாகும். மேலும், மருத்துவமனையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன ஒரு நோயாளி, அதன் பிறகு உடலுறவு மூலம் மற்றவர்களுக்கு இந்த வைரஸை பரப்பியதாக உலகில் இதுவரை ஒரு வழக்கு கூடப் பதிவாகவில்லை என்று நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழக நிபுணர் ஸ்டீவன் பிராட்ஃபுட் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இருப்பினும், கொரோனா பரவிய தொடக்க காலத்தில் உலக நாடுகள் காட்டிய அலட்சியமே அது உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது என்பதால், ஹண்டா வைரஸ் விஷயத்தில் மருத்துவ உலகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. வைரஸ்கள் தங்களை தாங்களே தொடர்ச்சியாக உருமாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை என்பதால், ‘ஆர்என்ஏ இருந்தால் மட்டும் பரவாது’ என்று அலட்சியமாக இருக்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, மீண்டும் ஒரு சர்வதேசப் பெருந்தொற்று உருவாவதைத் தடுக்கும் நோக்கில், உலக நாடுகள் உடனடியாக ஹண்டா வைரஸிற்கான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.