கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்ஷன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரது இந்த விசித்திரப் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆரம்பத்தில் பெட்ரோலின் வாசனையை மட்டும் முகர்ந்து பார்த்து வந்த ஷானன், நாளடைவில் அதற்கு முற்றிலும் அடிமையாகி அதை குடிக்கவும் தொடங்கியுள்ளார்.
ஷானன் தினமும் காலையில் எழுந்தவுடன் டீ, காபிக்கு பதிலாக பெட்ரோல் குடிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு நாளில் பலமுறை பெட்ரோல் குடிக்கும் இவர், இரவு தூங்குவதற்கு முன்பும் அதை குடிக்கிறார். பெட்ரோல் குடிக்கும் போது தனது நாக்கில் ஒருவித நடுக்கமும், தொண்டையில் கடுமையான எரிச்சலும் ஏற்படுவதாகக் கூறும் ஷானன், மன அழுத்தமோ அல்லது தனிமையோ உணரும் போதெல்லாம் தனக்கு அமைதி கிடைப்பதற்காக பெட்ரோல் குடிப்பதாகத் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் இவரைத் தடுக்க முயன்றாலும், அவர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக பெட்ரோலை வாங்கி இவர் குடித்து வருகிறார்.
மருத்துவ நிபுணர்கள் இந்த பழக்கம் மிகவும் அபாயகரமானது என்று எச்சரித்துள்ளனர். பெட்ரோல் என்பது மனித உடலுக்குள் செல்லக் கூடாத ஒரு நச்சு இரசாயனம் என்பதால், இது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளையை கடுமையாகப் பாதித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மனநல நிபுணர்களின் கூற்றுப்படி, இது வெறும் பழக்கம் மட்டுமல்ல, ‘பிகா டிஸார்டர்’ எனப்படும் ஒரு அரிய வகை மனநலக் குறைபாடாகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மனித உடலுக்குத் தேவையில்லாத மண், சாக்லேட், பெயிண்ட் அல்லது பெட்ரோல் போன்ற நச்சுப் பொருட்களை உட்கொள்ளும் தீவிரமான ஆசை ஏற்படும் என்று விளக்கமளித்துள்ளனர்.
