பிரியாணி வாங்கிய சண்டை… மஞ்சள் பூசி மறைக்கப்பட்ட கொலை கொடூரம்.. இறுதிச்சடங்கில் அம்பலமான கணவனின் நாடகம்.. அரியலூரை உலுக்கிய சம்பவம்…!!

By Swetha on வைகாசி 19, 2026

Spread the love

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிரியாணி வாங்கியதில் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரமங்கலம் அடுத்த செங்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளியான ரமேஷ் (45) என்பவரின் மனைவி சுமதி (41). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரைப் பார்க்க, சுமதி ரூ.2,000 கடன் வாங்கி ரமேஷிடம் கொடுத்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில், ரமேஷ் ரூ.750-க்கு பிரியாணி வாங்கியுள்ளார். கடன் வாங்கி வந்திருக்கும் சூழ்நிலையில் இவ்வளவு அதிக விலைக்கு பிரியாணி வாங்க வேண்டுமா என்று சுமதி கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரியாணி சண்டையானது மறுநாள் காலையும் தொடர்ந்துள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் ரமேஷ், அருகில் இருந்த சவுக்கு மரக்கட்டையை எடுத்து சுமதியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியின் மரணத்தை அடுத்து, கொலையை மறைக்க திட்டமிட்ட ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சுமதியின் உடலில் இருந்த காயங்களின் மீது மஞ்சள் பூசி மறைத்து, இறுதிச்சடங்கிற்கான நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

   

உடலை உடனடியாக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முயன்றபோது, சுமதியின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வடிவேல் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார், மயானத்திற்குச் செல்லும் வழியிலேயே சுமதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரமேஷிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் மனைவியை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ரமேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.