கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காதபோது, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ்தான் ஆதரவு அளித்தது. மேலும், விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி நேரில் பங்கேற்றார். கேரளா முழுவதும் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள சூழலில், அவர் இந்த விழாவில் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் செல்லாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் இந்த விழாவிற்குச் செல்லாமல் தவிர்த்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது வரவிருக்கும் சந்திப்புதான் மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தவெக தரப்பில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, மே 22ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியுடன் தவெக நல்லுறவைக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை நிச்சயமற்றதாக இருப்பதால், மாநில-மத்திய உறவை மேம்படுத்தி மத்திய அரசின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் விஜய் அரசு உள்ளது. எனவே, மோடியைச் சந்திப்பதற்கு முன்பாக காங்கிரஸின் பிரம்மாண்ட அரசியல் மேடையில் தோன்றி மத்திய அரசை முகம் சுளிக்க வைக்க விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மாநில நலன் சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் கட்சியுடன் அளவுக்கு அதிகமான நெருக்கம் காட்டினால், அது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைக் கோபப்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் பிற திட்டங்களுக்கான ஆதரவு கிடைக்காமல் போகலாம். இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காகவே விஜய் கேரளா செல்லவில்லை என்றும், டெல்லி பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு அவர் கேரளா சென்று வி.டி.சதீசனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் தவெகவினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“விஜய்யின் இந்த முடிவை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு ராகுல் காந்தி வந்திருந்தும், விஜய் கேரளா செல்லாதது சுயநலமானது என்று திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் சாடியுள்ளார். மேலும், விஜய்க்கு எதிராக இருக்கும் ஆடம்பர கார் வரி வழக்கு மற்றும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு போன்றவற்றை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருவதால், அந்தப் பயத்தின் காரணமாகவே அவர் பாஜாகவை அரவணைத்துச் செல்வதாகவும், கேரள விழாவைப் புறக்கணித்ததாகவும் திமுக தரப்பு விமர்சித்துள்ளது.”
