ஜெயம் ரவி – குஷ்பூ மோதலுக்கு நடுவே வைரலாகும் ‘சைமா’ வீடியோ… அன்று உருகி உருகி பாராட்டிய குஷ்பூ.. இன்று என்னாச்சு..?

By Swetha on வைகாசி 19, 2026

Spread the love

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் ரவி, தனது பிள்ளைகளைப் பார்க்க ஆர்த்தி தரப்பு அனுமதிப்பதில்லை என்று கூறி வெடித்து அழுதார். மேலும், “மூன்றெழுத்து இட்லி நடிகை” ஒருவரால் தனது வாழ்க்கை நாசமாகிவிட்டதாக அவர் பெயர் குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார். இது நடிகை குஷ்பூவைக் குறிப்பதாகப் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், குஷ்பூவும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தங்களது டிஎன்ஏவை நிரூபிப்பதிலேயே சிலர் மும்முரமாக இருக்கிறார்கள்” என ரவிக்கு மறைமுகமாகக் காட்டமான பதிலடி கொடுத்திருந்தார்.

ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் குஷ்பூ என்பதால், தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடந்த காலங்களில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததைக் காட்டும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகி வருகிறது. முன்னதாக, ரவியின் நெருங்கிய தோழியான பின்னணி பாடகி கெனிஷா, தான் ரவியிடமிருந்து விலகுவதாகவும், சென்னைக்கே இனி வரப்போவதில்லை என்றும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.

   

தற்போது ட்ரெண்டாகி வரும் அந்தப் பழைய வீடியோ, ஒரு சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில் எடுக்கப்பட்டதாகும். அதில் ஜெயம் ரவிக்கு விருது வழங்க மேடைக்கு வந்த குஷ்பூ, “ரவியின் கண்களைப் பார்த்தாலே ரொமான்ஸ் வந்துவிடும்; அவர் எங்கள் வீட்டு மாப்பிள்ளை, இப்படி ஒரு மனிதர் நமக்குக் கிடைக்கவில்லையே என எல்லாப் பெண்களும் ஏங்குவார்கள்” என்று ரவியை ஏகத்திற்கும் புகழ்ந்து பேசியிருந்தார். அப்போது மேடைக்கு வந்த ஜெயம் ரவி, குஷ்பூவின் முன்னிலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் இணைந்து அந்த விருதைப் பெற்றுக் கொண்டு, தங்களுக்குள் இருக்கும் காதல் குறித்து கலகலப்பாகப் பேசிய பழைய நினைவுகள், தற்போதைய கசப்பான சூழலுக்கு மத்தியில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.