திருவாரூரில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது, திமுகவின் கதை முடிந்துவிட்டது என்று நினைக்கும் இன எதிரிகள் சூழ்ச்சிகளைச் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், திமுக பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருந்தாலும், தோல்வி அடையும் போதெல்லாம் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து வருவதே அதன் வரலாறு என்று தொண்டர்களுக்கு ஊக்கமளித்தார்.
திமுகவினர் யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இன்றைக்கும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி செய்கிறது என்றும் அவர் கூறினார். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்களிடம், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தத் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்கிறது என்றும், இந்தத் திட்டங்களை யாராலும் மாற்றிவிடவோ, தடுத்துவிடவோ முடியாது என்றும் உறுதியுடன் பேசினார்.
சமூக வலைத்தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு கட்சி சிறு குழந்தைகளை அவர்களின் குடும்பத்தினரிடம் பிரச்சாரம் செய்ய வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், தங்களது கணக்கு இந்த முறை தவறாகப் போய்விட்டதாக ஒப்புக்கொண்டார். மேலும், இனிமேல் திமுகவினர் மிகவும் உஷாராக இருந்து அத்தகைய உத்திகளை முறியடிக்க வேண்டும் என்றும், வரும் காலத்தில் மீண்டும் நாமே ஆட்சிக்கு வருவோம் என்றும் தொண்டர்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில் உரையாற்றினார்.
