பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் காவலரைத் தாக்கி தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நசீப் சிங் என்ற அந்த விசாரணைக் கைதி, ஹோஷியார்பூர் மத்திய சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாகCivil Hospital-க்கு மருத்துவப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை முடிந்து, இ-ரிக்ஷா (e-rickshaw) மூலம் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, நசீப் சிங் திடீரென போலீஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்றுள்ளார்.
இந்த தப்பியோடும் முயற்சியின் போது, கைதியைக் கயிற்றால் பிணைத்து அழைத்துச் சென்ற மூத்த காவலர் ஜஸ்தீப் சிங் என்பவரை நசீப் சிங் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நடுத்தெருவில் கடுமையான மற்போர் போன்ற போராட்டம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தரையில் விழுந்து புரண்ட இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த காவலர் ஜஸ்தீப் சிங், கைதியின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையிலும் அவரைத் தப்பிக்க விடாமல் தடுத்துள்ளார்.
இந்த மோதலின் போது, காவலரின் துப்பாக்கியைப் பறிக்க கைதி நசீப் சிங் தீவிரமாக முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காவலரின் துப்பாக்கியிலிருந்து குண்டுகள் பாய்ந்ததில், கைதி நசீப் சிங் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார். படுகாயமடைந்த காவலர் ஜஸ்தீப் சிங் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லப்பட்ட கைதி நசீப் சிங் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
