திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது தவறுதான் என்று கார்த்தி சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டதாகக் கூறப்படும் விமர்சனங்கள் தேவையற்றவை என்றும், திமுக ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தபோது காங்கிரஸ் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி வேண்டாம் என்று சிலர் கூறிய போதிலும், முழு மனதுடன்தான் தேர்தலைச் சந்தித்ததாகவும், தேர்தல் முடிவுகள் சாதகமாக வராததால் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல காங்கிரசும் திமுகவிடம் இருந்து பரஸ்பரமாகப் பிரிந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசியலில் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், அவர்களுக்குத் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். திமுக ஒரு ஆரோக்கியமான அரசியல் கட்சியாகத் தொடரும் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை என்றார். இந்தத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்குத்தான் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதால், அக்கட்சி இனி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை மக்களிடம் இழந்துவிட்டது என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் தவெக மற்றும் திமுக ஆகிய இரண்டுமே பிரதான அரசியல் கட்சிகளாக இருக்கும் என்று கூறிய அவர், மக்கள் தவெக கூட்டணி ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தில் மதச்சார்பற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே விஜய் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்றும், மரியாதை நிமித்தமாகவே அவர் தலைவர்களைச் சந்தித்தார் என்றும் கூறினார். டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவது என்பது புதிய முடிவு அல்ல, எல்லா அரசுகளும் செய்வதுதான் என்றும், தவெக அரசைப் பற்றிய முழுமையான விமர்சனத்தைக் கொஞ்ச நாட்களுக்குப் பிறகே கூற முடியும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சி எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும் கார்த்தி சிதம்பரம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
