முடிவுக்கு வருகிறதா கேஸ் பற்றாக்குறை..? நெருக்கடிக்கு மத்தியில் 20,000 டன் LPG உடன்.. ஹார்முஸை கடந்து.. இந்தியா வந்த ‘சிமி’ கப்பல்…!!

By Swetha on வைகாசி 17, 2026

Spread the love

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ‘சிமி’ என்ற இந்திய சமையல் எரிவாயு (LPG) கப்பல், உலகின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கத்தாரின் ராஸ் லஃப்பானில் இருந்து சுமார் 20,000 டன் சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு வந்த இக்கப்பலின் வருகை, நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறைக்கு ஒரு தற்காலிகத் தீர்வாக அமைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுடனான மோதல் காரணமாக, ஈரான் அரசு ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்துக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த வழியில் பதற்றம் நீடிப்பதால், இந்தியாவின் சமையல் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

   

https://twitter.com/i/status/2055935100131688560

   

இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட தீவிர ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பலனாக இக்கப்பலுக்குச் சிறப்பு அனுமதி கிடைத்தது. மேலும், இந்திய கடற்படையின் பலத்த பாதுகாப்புடன் இந்த எரிவாயுக் கப்பல் ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து குஜராத் வந்து சேர்ந்துள்ளது, இந்திய மக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.