தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) புதிய அமைச்சரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தில் இருந்து மற்றுமொரு அதிரடியான ரகசிய தகவல் கசிந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9 அமைச்சர்களின் பட்டியலைத் தாண்டி, மீதமுள்ள முக்கிய அமைச்சரவை இலாக்காக்கள் அனைத்தும், தங்களுக்கு ஆதரவளிக்க முன்வரும் அதிமுக உறுப்பினர்களுக்காகவே ரகசியமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சுமார் 9 அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த புதிய அமைச்சரவையில் ‘கேபினட்’ சீட் கிடைக்கப் போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மற்றும் தவெகவிற்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கும் எம்.எல்.ஏ-க்களை முறைப்படி தங்கள் பக்கம் இழுத்து, அவர்களுக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பின்னணி வேலைகளும், “அதிமுகவை வேகமாக உடைக்கும் அதிரடிப் பணிகளும்” நேற்று இரவு முதலே மிகத் தீவிரமாக ஆரம்பித்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “எவ்வளவு வேகமாக அதிமுகவை உடைத்துக் கொண்டு, அதிகாரப்பூர்வமாக வந்து இணைகிறார்களோ… அவ்வளவு வேகமாக அவர்களுக்கு ரெட் கார்பெட் வரவேற்புடன் கேபினட் அந்தஸ்து வழங்கப்படும்” என்ற ஒற்றை இலக்குடன் இந்த அசைன்மென்ட் களம் இறக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பட்டியலில் சில முக்கியத் துறைகள் இன்னும் முழுமையாக யாருக்கும் ஒதுக்கப்படாமல், நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. குறிப்பாக, வருவாயை அள்ளித்தரும் மற்றும் மக்கள் மத்தியில் எப்போதும் பவர்ஃபுல்லான துறைகளாகக் கருதப்படும் பதிவுத்துறை (Registration Department), போக்குவரத்துத் துறை (Transport Department) ஆகிய இலாக்காக்கள் தூண்டிலாக வீசப்பட்டுள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. “வாங்கய்யா வாங்க… போனா கிடைக்காது!” என்கிற ரீதியில், அமைச்சரவை ஆசையைக் காட்டி, அதிமுகவில் இருக்கும் விக்கெட்டுகளை வளைக்க தவெக தரப்பில் மிக பலமான வலை வீசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமைச்சரவை பதவிகளை வாரி வழங்கி, ஒட்டுமொத்தமாக கட்சியை உடைக்க நடக்கும் இந்த ‘மிட்நைட் ஆபரேஷனை’ எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையான அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஏற்கனவே பல எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், எஞ்சியிருக்கும் எம்.எல்.ஏ-க்களையாவது தக்க வைக்க அவசர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், “அதிகாரப் பகிர்வு, ஆளுங்கட்சியில் முக்கியப் பதவி” என தவெக தரப்பில் கொடுக்கப்படும் அசைக்க முடியாத சலுகைகளால், அதிமுகவின் முக்கிய விக்கெட்டுகள் தங்களின் இறுதி முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசியலின் தராசை மொத்தமாக மாற்றியமைக்கப் போகும் அந்த 25+ எம்.எல்.ஏ-க்கள் யார் என்பது இனிவரும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்!
