“டெல்லி கொடுத்த ரகசிய அஸைன்மென்ட்?… திடீரென களமிறங்கிய சூப்பர்ஸ்டார்… எடப்பாடிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. அதிரும் தமிழக அரசியல்”…!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

தமிழக அரசியலில் எப்போதும் ஒரு முக்கிய சக்தியாக உற்றுநோக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது பிளவுபட்டுள்ள அதிமுக நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அவர் தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவு காரணமாகத் தனது அரசியல் முடிவிலிருந்து பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நேரடித் தேர்தல் அரசியலில் களம் இறங்காவிட்டாலும், தமிழகத்தின் முக்கிய அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து உற்று கவனித்து வருகிறார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடனும் அவர் நல்ல நட்புமுறையைப் பேணி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பரபரப்பான சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத இக்கட்டான சூழல் நிலவியது. அப்போது திமுகவின் மறைமுக ஆதரவோடு அதிமுக ஆட்சியை அமைப்பதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்குப் பின்னணியில் ரஜினிகாந்த் இருந்ததாகவும், ஆனால் அந்த முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

   

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் கடுமையான உள்கட்சிப் பூசல் வெடித்து, கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தனியாக அணி திரண்டனர். இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசுக்கு எதிரான சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இந்த விரிசல் வெளிப்படையாக அம்பலமானது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அணி தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி அணியினர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

   

அதிமுகவின் இந்த வரலாறு காணாத பலவீனத்தையும் பிளவையும் சரி செய்ய, ரஜினிகாந்த் கடந்த ஒரு வாரமாகத் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் பாஜகவில் உள்ள முக்கியப் புள்ளிகள் மூலமாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார். “தமிழ்நாட்டின் அரசியல் சமநிலைக்கு பலமான அதிமுக மிகவும் அவசியம்; உங்களுக்குள் இருக்கும் சண்டைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு இணைந்து பணியாற்றுங்கள்” என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் நேரடியாகவே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், தான் அன்று அரசியலுக்கு வராமல் போனதை நினைத்து ரஜினி வருத்தப்படுவதாகவும், உடல்நலம் ஒத்துழைத்தால் நிச்சயம் களமிறங்கி வேலை பார்ப்பேன் என அவர் குறிப்பிட்டதாகவும் ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.