தற்போதைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தின் விலை எவ்வளவு குறைவாக இருந்தது என்பதைக் காட்டும் பழைய நகை ரசீது ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 1970-ம் ஆண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த ரசீது, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ‘ஷியாம் ஜூவல்லர்ஸ்’ என்ற கடையினுடையது. இந்த ரசீதைப் பார்த்த இன்றைய தலைமுறையினர், அந்த காலத்தில் தங்கம் இவ்வளவு மலிவாக இருந்ததா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த வைரல் ரசீதின் படி, 1970-களில் 10 கிராம் தங்கம் வெறும் 185 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு 20 கிராம் தங்கச் சங்கிலியின் விலை 370 ரூபாய் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய விலையுடன் ஒப்பிடும்போது இது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்குக் குறைவாக உள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1.50 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், கடந்த 56 ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு சுமார் 800 மடங்கு உயர்ந்துள்ளதை இந்த ரசீது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
https://www.instagram.com/reel/DYROpy9Sd4A/?utm_source=ig_web_copy_link
இந்த ரசீது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் பகிரப்பட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நெட்டிசன்கள் “நமது முன்னோர்கள் அந்த காலத்திலேயே அதிக தங்கத்தை வாங்கி வைத்திருக்கலாம்” என்று வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். பணவீக்கம் மற்றும் பொருளாதார மாற்றத்தினால் தங்கத்தின் விலை எப்படி அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதற்கு இந்த வைரல் ரசீது ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. தங்கம் வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் மாறியுள்ளதை இது உணர்த்துகிறது.
