திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், போதை பழக்கத்தால் விளைந்த ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. பொறியியல் பட்டதாரியான அய்யப்பன் (32) என்ற இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். தந்தை வெளிநாட்டில் இருக்கும் சூழலில், தாய், தாத்தா பிச்சமுத்து (80) மற்றும் பாட்டி சந்திரா (75) ஆகியோருடன் வசித்து வந்த இவரை, குடும்பத்தினர் போதை பழக்கத்திற்காகக் கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை போதை தலைக்கேறிய நிலையில் அய்யப்பன் தனது தாத்தா மற்றும் பாட்டியை இரும்பு கம்பி மற்றும் பீர் பாட்டிலால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் நிலைகுலைந்த முதியவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பின்னரும், ஆத்திரம் அடங்காத அய்யப்பன் அவர்களின் உடல்களைக் கட்டிலில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி அவர்களுக்குத் தீ வைத்துள்ளார். அதிகாலையில் வீட்டின் உள்ளே இருந்து தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடுவூர் காவல்துறையினர், உடல் கருகிய நிலையில் கிடந்த முதியவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அய்யப்பனின் தாய் அளித்த புகாரின் பேரில், மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அய்யப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்கு படித்த ஒரு இளைஞர், போதைப் பொருளுக்கு அடிமையாகித் தனது பாசத்திற்குரிய தாத்தா மற்றும் பாட்டியையே ஈவு இரக்கமின்றி எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்த அய்யப்பனை விரைந்து விசாரித்து அவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் துயர சம்பவத்தைத் தொடர்ந்து மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே மக்களின் பிரதான புகாராக உள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொடூரங்கள் நிகழாமல் இருக்க, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
