சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்து திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அப்போது, படப்பிடிப்பிற்காக பிரத்யேகமாக வீடு போன்ற கலை அலங்கார செட் (Art Work) அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது இளைஞரான கார்த்திகேயன் என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சித் தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு தளம் சோகத்தில் ஆழ்ந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த கார்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
