சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். ஆனால், சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் திட்டமிட்டபடி காலையில் படம் வெளியாகவில்லை. படக்குழு தரப்பில் முறையான விளக்கம் ஏதும் உடனடியாக வழங்கப்படாத நிலையில், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் தியேட்டர்களை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழலில், படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணீர் மல்கப் பேசிய அவர், “வாழ்க்கையில் உள்ள கவலைகளை மறக்கவே மக்கள் சினிமா பார்க்க வருகிறார்கள்; ஆனால் படம் பார்ப்பதே ஒரு பெரிய போராட்டமாக மாறிப்போனதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என எங்கு நீங்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும் அதற்கு நானே பொறுப்பு. இது நான் எதிர்பார்க்காத ஒன்று,” என உடைந்து போய் பேசியுள்ளார்.
மேலும், இந்தப் படத்திற்காக நடிகர் சூர்யா தனது உழைப்பை முழுமையாகக் கொடுத்துள்ளதைக் குறிப்பிட்ட பாலாஜி, “கருப்பன் வரான் வழி மறிக்காதே” என்று கூறினாலும் பலர் வழி மறித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்தார். இருப்பினும், அனைத்துப் பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு இன்று மாலை 6 மணிக்குள் படம் வெளியாகிவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த சூர்யா ரசிகர்கள், ஆர்.ஜே. பாலாஜிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
#RjBalaji‘s Very Emotional video..🥲
“I’m really sorry.. It shouldn’t have happened.. I didn’t expect this too.. I hope all the issues will get resolved and the film will be released this evening at 6PM..❣️ Sorry for making you all go through this..🫂”pic.twitter.com/cCkOyFXfE0
— Laxmi Kanth (@iammoviebuff007) May 14, 2026
