தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த ஆட்சி 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்டது என்றும், தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சி நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 233 தொகுதிகளில் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான பலம் இன்றி பிற கட்சிகளின் ஆதரவைச் சார்ந்து இருப்பதை அவர் விமர்சித்தார்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய உதயநிதி, அரசியல் காரணங்களுக்காக அந்தத் திட்டங்களை முடக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவற்றுக்கான தொகைகள் பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அடுத்த மாதமும் தடையின்றித் தொடர வேண்டும் என எச்சரித்தார். இந்த அரசு வெறும் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ ஆட்சியாக இருக்கக் கூடாது என்றும் அவர் சாடினார்.
முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் உதயநிதி கேள்விகளை எழுப்பினார். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் என்றும், வெற்றி பெற்ற பிறகு திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்குக் கூட நன்றி தெரிவிக்காமல் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், எம்.எல்.ஏ.க்களை “கடன் வாங்கி” ஆட்சி நடத்துவதாகவும், கூவத்தூரை மிஞ்சும் வகையில் தற்போது கூத்துகள் நடப்பதாகவும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
உதயநிதியின் உரையின்போது, “ஒரு கட்சித் தலைவருக்கே தெரியாமல் அந்த எம்.எல்.ஏ-வை உங்கள் பக்கம் இழுத்துள்ளீர்கள்” என்று அவர் குறிப்பிட்டது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தன்னைக் குறித்துத்தான் என்று கருதிய அமமுக எம்.எல்.ஏ காமராஜ் எழுந்து ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட உதயநிதி, “நான் உங்களைச் சொல்லவில்லை” என்று பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பிரபாகர் தலையிட்டு காமராஜை அமர வைத்தார், இதனால் அவர் மிகுந்த அதிருப்தியுடன் தனது இருக்கையில் அமர்ந்தார்.
