அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் தற்போது வெடித்துச் சிதறியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த 6 பேருக்கு அமைச்சர் பதவியும், 10 பேருக்கு வாரியத் தலைவர் பதவியும் தருவதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆசை காட்டி பேரம் பேசியுள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தவெக அரசை ஆதரிப்பதன் மூலம் கட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகச் சாடியுள்ள எடப்பாடி பழனிசாமி, வெறும் அதிகார ஆசைக்காகவும் அமைச்சர் பதவியைப் பெறுவதற்காகவுமே வேலுமணி இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் நிலவும் பிளவை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
