தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் த.வெ.க அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த ஆட்சியை மக்கள் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிய அவர், மொத்தமுள்ள 4.93 கோடி வாக்குகளில் வெறும் 1.72 கோடி வாக்குகளை மட்டுமே ஆளும் கட்சி பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 3.21 கோடி மக்கள் இந்த ஆட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர் என்றும் பேசினார். சுமார் 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த அரசு மீது, வாக்களித்த மக்களுக்கே தற்போது நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தற்போதைய அரசு முடக்குவதாகக் குற்றம் சாட்டிய உதயநிதி, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி இன்னும் மக்களைச் சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் அடுத்த மாதம் முறையாகத் தொடங்கப்பட வேண்டும் என எச்சரித்த அவர், இந்த ஆட்சி வெறும் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ ஆட்சியாக மட்டும் இருந்துவிடக் கூடாது எனச் சாடினார். மக்கள் நலத்திட்டங்களில் அரசியல் செய்வதைத் தவிர்த்துவிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் தேர்தல் அணுகுமுறை குறித்துப் பேசிய உதயநிதி, ஒரு தொகுதியில் நிற்கத் தைரியமின்றி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் விமர்சித்தார். மேலும், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்குக் கூட நன்றி தெரிவிக்காமல், வெற்றி பெற்ற கையோடு அந்தப் பதவியை அவர் ராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்டி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவைப் பயன்படுத்தி, ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெற்று இந்த ஆட்சி அமைந்திருப்பதாகக் கூறிய அவர், “புஷ்பா” பட பாணியில் ஒருவரின் வீட்டிற்கு சோஃபா சென்றதும், அதன் பின்னால் முதலமைச்சர் சென்றதுமான நிகழ்வுகள் அரசியல் மாற்றமல்ல, அது ஒரு ‘எக்ஸ்சேஞ்ச்’ (Exchange) என எள்ளி நகையாடினார்.
இறுதியாக, அதிமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதால் இந்தத் தீர்மானத்தில் த.வெ.க அரசு வெற்றி பெறக்கூடும் என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போலவே இந்த ஆட்சி தொடரத் தாங்கள் எவ்வித இடையூறும் செய்யப்போவதில்லை என்று உறுதியளித்தார். இருப்பினும், மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், ஆட்சியின் செயல்பாடுகள் வெறும் காட்சிப் பொருளாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உதயநிதி ஸ்டாலினின் இந்த ஆக்ரோஷமான பேச்சு சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
