உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணம் முடிந்த 14-வது நாளிலேயே மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூரைச் சேர்ந்த பிரியங்கா மிஸ்ராவிற்கும், ஜான்சியைச் சேர்ந்த சுபம் என்பவருக்கும் ‘Shaadi.com’ இணையதளம் வழியாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மாதம் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து வீட்டில் சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மதிய வேளையில் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளனர். அங்கு பிரியங்கா மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் (Parapet wall) காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்ததாகவும், இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த பிரியங்காவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் கணவர் சுபமின் நடத்தையில் போலீசாருக்குப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. சுட்டெரிக்கும் மதிய வெயிலில் எதற்காக அவர் பிரியங்காவை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார் என்ற கேள்விக்கு அவரிடம் சரியான பதில் இல்லை. இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபமை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
