திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி, உடல்நலக் குறைவால் விருப்ப ஓய்வு பெற்ற இவர், தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் பார்த்திபன் (32) மின்சாரம் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். சிறுவயது முதலே மதுப்பழக்கத்திற்கு அடிமையான பார்த்திபன், கடந்த ஏழு ஆண்டுகளாக போதை ஏறும்போதெல்லாம் தனது பெற்றோர் மற்றும் தங்கையை உடல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் பார்த்திபனை மேலும் நிலைகுலையச் செய்துள்ளன. தனது வருமானம் முழுவதையும் குடிக்கே செலவழித்த அவர், ஆன்லைன் மூலமாகவும் வெளியாட்களிடமும் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தனது தந்தை நடராஜனிடம் குடும்பச் சொத்துக்களை விற்றுப் பணம் தருமாறு போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அந்த குடும்பத்தில் நீண்ட நாட்களாகவே அமைதியற்ற சூழல் நிலவி வந்துள்ளது.
சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்து போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்த பார்த்திபன், தனது தாய் இளஞ்சியத்திடம் நிலத்தை விற்றுப் பணம் கேட்டு மிரட்டித் தாக்கியுள்ளார். அப்போது தந்தை நடராஜன் தடுத்தும் கேட்காத பார்த்திபன், மீண்டும் நேற்று மாலை வந்து தனது தந்தையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நடராஜன், ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்புக் குழாயை எடுத்துப் பார்த்திபனைத் தாக்க முயன்றார். உயிருக்குப் பயந்து தோட்டத்திற்குள் ஓடிய மகனைத் துரத்திச் சென்ற நடராஜன், அவரது தலையில் பலமாகத் தாக்கியதில் பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடித்தடித்து உயிரிழந்தார்.
மகன் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடராஜன், இது குறித்து உடனடியாகச் சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், பார்த்திபனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் கொலை செய்த தந்தை நடராஜனைக் கைது செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை மற்றும் கடன் சுமையால் ஒரு குடும்பமே சிதைந்து போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
