கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லாவிற்கும், ஊட்டியைச் சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு மணி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி மணி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் பிரபல்லாவை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்ததால் மிகுந்த சோகத்தில் இருந்த பிரபல்லா, தனது குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மணியின் பிரிவைத் தாங்க முடியாமல் மனமுடைந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மணக்கோலம் காண வேண்டிய இளம் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
