பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர் ஒருவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்த நபரிடம் இருந்த பொம்மைகளைச் சோதனையிட்டபோது, அதற்குள் சுமார் 25 கிலோ போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இந்தப் போதைப் பொருட்கள் கம்போடியா நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி வரப்பட்டது அம்பலமாகியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்தியது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கடத்தலில் ஈடுபட்ட நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு, அவர் மீது போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
