தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு (ஜோசப் விஜய்) விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதே வேளையில், பதவியேற்பு விழாவில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். குறிப்பாக, அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படுவதே மரபு எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இன்று அந்த மரபு மீறப்பட்டு ‘வந்தே மாதரம்’ முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் இசைக்கப்பட்ட பின் மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். இது ஆளுநரை மகிழ்விக்கச் செய்யப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், இது குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள 10 லட்சம் கோடி கடன் சுமை மற்றும் வெள்ளை அறிக்கை குறித்த அறிவிப்புக்கும் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். கடனை வெறும் தொகையாகப் பார்க்காமல், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GSDP) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றும், தமிழகத்தின் கடன் அளவு 15-ஆவது நிதிக் குழு நிர்ணயித்த வரம்பிற்குள்ளேயே இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முழுமையான கடனை மட்டும் சொல்லி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படும் என்று அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
மதச்சார்பற்ற அரசு அமையும் என்ற நம்பிக்கையில்தான் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்ட திருமாவளவன், ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டது தங்களுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற கொள்கையை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த விஜய், தனது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். விசிக-வின் இரு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய மூன்று முக்கியத் திட்டங்களையும் திருமாவளவன் வரவேற்றுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல் நாளிலேயே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டதைப் பாராட்டியுள்ள அவர், நிர்வாக ரீதியான மரபுகள் மற்றும் கொள்கை முடிவுகளில் அரசு கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் புதிய அரசுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான இந்த ஆரம்பக்கால உரசல், தமிழக அரசியலில் புதிய விவாதங்களைத் தொடங்கியுள்ளது.
