“தனி ரூட்டில் சி.வி.சண்முகம்! பதவியேற்காமல் வெளியேறியது ஏன்?”… தமிழக அரசியலை புரட்டிப்போடும் 34 எம்.எல்.ஏ-க்களின் மூவ்….!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

தமிழகத்தின் 2026 சட்டசபை தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழக அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் முதலில் பதவியேற்றனர். இதில் அமைச்சர் கீர்த்தனா வெற்றிச் சான்றிதழ் கொண்டுவராததால் பதவியேற்க முடியாமல் போனது ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தரப்பில் நிலவும் உட்கட்சி மோதல் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று இரண்டு குழுக்களாகப் பிரிந்து சட்டசபைக்கு வந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு குழுவும் வருகை தந்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது ஒரு சிலரே மேஜையைத் தட்டி வரவேற்ற நிலையில், வேலுமணி பதவியேற்றபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக எஸ்.பி. வேலுமணி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவலும் தீயாய் பரவி வருகிறது.

   

இந்த அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபைக்குத் தனியாளாக வந்த அவர், சபைச் செயலாளர் சீனிவாசன் தனது பெயரைப் பதவியேற்க அழைத்தபோது அவையில் இல்லை. பதவியேற்காமலேயே அவர் வெளியேறியது அதிமுகவில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், அவரைப் பதவியிலிருந்து விலகக் கோரி சி.வி.சண்முகம் தரப்பு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

   

தற்போதுள்ள தகவல்களின்படி, சி.வி.சண்முகம் சுமார் 34 எம்.எல்.ஏ-க்களுடன் கடந்த இரண்டு நாட்களாகத் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த 34 பேரும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையில் இடம் பிடிக்க முயற்சி செய்து வருவதாகப் பேசப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதாலேயே இந்த அதிரடி முடிவை நோக்கி சி.வி.சண்முகம் நகர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிமுக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.