சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கேப்டன்சி மற்றும் சிஎஸ்கேவுடனான பயணம் குறித்துப் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஒரு மெகா டிரேடிங் மூலம் சென்னைக்கு வந்த சஞ்சு, நடப்புத் தொடரில் 400 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தி வருகிறார். குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக அவர் விளாசிய சதங்கள், அவரைச் சேப்பாக்கின் புதிய நம்பிக்கையாக மாற்றியுள்ளது. உலகக்கோப்பை தொடர் நாயகன் என்ற பெருமையுடன் மஞ்சள் சீருடையில் களமிறங்கியுள்ள சஞ்சுவின் ஒவ்வொரு அடியும் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சஞ்சு சாம்சன் போன்ற அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் அணிக்குள் நுழைந்ததும், ருதுராஜுக்குப் பதில் அவர் கேப்டன் ஆவாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. இதற்கு ‘சூப்பர் கிங்ஸ்’ பாட்காஸ்ட்டில் மிக முதிர்ச்சியான பதிலை சஞ்சு அளித்துள்ளார். “நான் ஏற்கனவே ஒரு அணியில் கேப்டனாக இருந்தவன் என்பதால், புதிய அணிக்குள் நுழையும்போது நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. ஒரு புதிய வீட்டுக்குச் செல்லும்போது முதலில் நம் தகுதியை நிரூபிப்பதே முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தை விட அணியின் வெற்றியே முக்கியம் என்ற சஞ்சுவின் இந்த அணுகுமுறை கிரிக்கெட் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது இடமாற்றத்திற்குப் பின்னால் இருந்த ரகசியத்தைப் பகிர்ந்த சஞ்சு, ருதுராஜ் கெய்க்வாட் தான் தன்னைச் சென்னைக்கு அழைக்க முதலில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். “ஐந்து ஆண்டுகள் கேப்டனாக இருந்த ஒரு வீரரைத் தனது அணிக்கு அழைக்க ருதுராஜுக்குத் தனித் துணிச்சல் வேண்டும். அவருடைய தன்னம்பிக்கையும், செயல்பாடுகளுமே என்னைக் கவர்ந்தன,” என ருதுராஜைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், சென்னைக்கும் மலையாளிகளுக்கும் உள்ள ஆழமான பந்தத்தைக் குறிப்பிட்ட அவர், தன் மீது நம்பிக்கை வைத்த சிஎஸ்கே நிர்வாகத்திற்காகத் தனது முழு உழைப்பையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.
களத்தில் அதிரடி காட்டுவது மட்டுமின்றி, கேப்டன் பதவி மீது ஆசைப்படாமல் ருதுராஜுக்குப் பக்கபலமாக இருக்கும் சஞ்சுவின் மெச்சூரிட்டி சிஎஸ்கே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கடந்த போட்டியில் சதத்தைத் தவறவிட்டாலும், அவர் காட்டிய வேகம் அணியின் வெற்றிக்கு மிக அவசியமானதாக இருந்தது. லக்னோவுக்கு எதிரான இன்றைய முக்கியமான போட்டியில் சிஎஸ்கே களம் காணும் நிலையில், சஞ்சு சாம்சனின் ஃபார்ம் மற்றும் ருதுராஜ் – சஞ்சு இடையேயான இந்த ஆரோக்கியமான பிணைப்பு சென்னை அணியைப் பிளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
