தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை எட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது ஒரு புதிய அரசியல் அதிரடியைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு, விஜய் தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வன்னி அரசு தனது பதிவில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு – இது திருமா காலம்! இனி உயர்வோம் மேலும் மேலும்!” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 2 இடங்களைக் கொண்டுள்ள விசிக-வின் ஆதரவு கடிதம் கிடைத்தால் மட்டுமே தவெக-வின் பலம் 117-ஐ எட்டும். இந்த இக்கட்டான சூழலில், வெறும் ஆதரவு மட்டும் போதாது, அமைச்சரவையிலும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை விசிக மறைமுகமாக முன்வைத்துள்ளது.
விசிக-வின் ஆதரவு கடிதம் நாளைதான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே “அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே அமமுக எம்.எல்.ஏ காமராஜ் மர்ம மாயம் மற்றும் குதிரை பேரப் புகார்களால் விஜய்யின் பதவியேற்பு சிக்கலில் உள்ள நிலையில், தற்போது விசிக-வின் இந்த அதிகாரப் பங்கீடு கோரிக்கை தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக-வின் இந்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்வாரா அல்லது தனிப்பெரும் கட்சியாக ஆளுநரைச் சந்தித்து கால அவகாசம் கோருவாரா என்பதே தற்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
