தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், மாநில அரசியல் களம் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது. 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையே, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-விற்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் தாமதத்தைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக பெரும் வன்முறை வெடித்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பானுசேகர் தலைமையில் தொண்டர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டதுடன், விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர். திமுகவின் தயவில் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது தவெக பக்கம் சாய்ந்த காங்கிரஸின் முடிவால் ஆத்திரமடைந்த திமுகவினர், ஆர்ப்பாட்டம் முடிந்து கலைந்து சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வார்த்தை மோதல் சில நிமிடங்களிலேயே கைகலப்பாக மாறியது. திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மருது மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் உள்ளிட்ட திமுகவினர், காங்கிரஸ் தொண்டர்களைச் சாலையிலேயே விரட்டி விரட்டித் தாக்கினர். காங்கிரஸ் நிர்வாகிகள் தப்பியோடியும் விடாமல் துரத்திச் சென்ற திமுகவினர், கட்சியின் கொடிகளைப் பிடுங்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜா காயமடைந்த நிலையில், மயிலாடுதுறை சாலைகள் போர்க்களமாகக் காட்சியளித்தன.
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக் மாற்றங்களும், ஆளுநரின் முடிவில் நிலவும் இழுபறியும் தமிழக அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, ஒருகாலத்தில் நெருங்கிய நட்பு பாராட்டிய திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, வரும் நாட்களில் தமிழக அரசியலில் இன்னும் பல அதிரடி திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
