மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற பொன்வேல், தற்போது தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி, அவர் மொத்தம் 600-க்கு 506 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். குறிப்பாகத் தமிழ் பாடத்தில் 96 மதிப்பெண்களும், கணக்குப்பதிவியலில் 93 மதிப்பெண்களும் பெற்று அசத்தியுள்ளார்.
பொன்வேலின் இந்த வெற்றியை ‘வாழை’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை திவ்யா துரைசாமி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்வேலின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு, “ஒரு வழியாக என் தம்பி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுவிட்டான்” என உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இவர்களது இந்த அன்பு கலந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் பலரது மனதை உருக்கிய பொன்வேல், நிஜ வாழ்க்கையிலும் படிப்பில் கவனம் செலுத்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். நடிப்பிலும் படிப்பிலும் கெட்டிக்காரராகத் திகழும் இவரைத் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். சினிமாவில் ஒரு பக்கம் வெற்றியைப் பார்த்தாலும், கல்வியிலும் அவர் காட்டியுள்ள இந்த அக்கறை பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
