இத்தாலியைச் சேர்ந்த பயண வலைப்பதிவர் மிரேலா கிறிஸ்டினா முராரியு இந்தியாவில் திறந்தவெளி ஜீப்பில் வனவிலங்குச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று அவர்கள் அருகில் வந்தது. திடீரென அந்தக் காரில் இருந்த மணமகன், ஜன்னல் வழியாக வெளியே தலைநீட்டி, புன்னகையுடன் மிரேலாவையும் அவருடன் இருந்தவர்களையும் தனது திருமணத்திற்கு வருமாறு அழைத்து, திருமணப் பத்திரிகையை நீட்டினார். நடுக்காட்டில் நடந்த இந்த எதிர்பாராத நிகழ்வு அந்தப் வெளிநாட்டுப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிகழ்வை வீடியோவாகப் பகிர்ந்த மிரேலா, “இந்தியாவில் பயணம் செய்வது என்பது வெறும் இடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல, அது மனிதர்களுடனான ஆழமான பிணைப்பு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காலையில் வெறும் சுற்றுலாப் பயணிகளாகப் பயணத்தைத் தொடங்கிய தங்களுக்கு, மதியமே ஒரு திருமணத்தில் கௌரவ விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்டது இந்திய விருந்தோம்பலுக்குச் சான்று என அவர் பாராட்டியுள்ளார். இந்திய கலாச்சாரத்தில் மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் “இதுதான் உண்மையான இந்தியா” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். “அந்நியர்களையும் சொந்தங்களாகக் கருதி அழைப்பது இந்தியர்களின் தனிச்சிறப்பு” என்றும், “இப்படியொரு நிகழ்வு இந்தியாவில் மட்டுமே சாத்தியம்” என்றும் இணையவாசிகள் மணமகனின் பெருந்தன்மையைப் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ, இந்திய கலாச்சாரத்தின் மீதான நன்மதிப்பை உலகளவில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
