விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் – சத்யா தம்பதியினரின் 11 வயது மகள் வர்ஷினி, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சத்யா வந்திருந்த நிலையில், அங்குள்ள இரண்டு கூரை வீடுகளில் ஒன்றில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மற்றொரு வீட்டில் சிறுமி வர்ஷினி தனியாக விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து தனது மகளைக் காணவில்லை எனத் தேடிச் சென்ற தாய் சத்யா, மற்றொரு வீட்டில் வர்ஷினி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். உயிரிழந்த சிறுமியின் உதட்டில் காயங்கள் இருந்ததோடு, அவர் அணிந்திருந்த வளையல்களும் உடைந்த நிலையில் சிதறிக் கிடந்துள்ளன. சிறுமியின் உடலில் காணப்பட்ட இந்த காயங்கள் மற்றும் தடயங்கள் அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்தை அதிகப்படுத்தியுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ‘சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கோரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
