சென்னையில் 6 வயது சிறுவனைப் பெற்ற தாயே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி (27) என்பவருக்கும் அவரது இரண்டாவது கணவர் வீரசெல்வனுக்கும் மித்ரன் என்ற 9 மாத குழந்தை உள்ளது. சிவரஞ்சனியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 6 வயது மகன் கிருஷ்ணனும் இவர்களுடனேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி அதிகாலை கிருஷ்ணன் சுயநினைவின்றி இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
தொடக்கத்தில் சிறுவன் சோபாவில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததாகச் சிவரஞ்சனி நாடகமாடினார். ஆனால், சிறுவனின் கழுத்தில் இருந்த தழும்பு மற்றும் உடற்கூராய்வு அறிக்கையில் மூச்சுத்திணறலால் மரணம் நிகழ்ந்திருப்பது உறுதியானது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிவரஞ்சனியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. சிறுவன் கிருஷ்ணன் பள்ளியில் மற்ற மாணவர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால் அவனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர். சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது தம்பியான 9 மாத குழந்தையிடம் விளையாடும்போது, அவன் கழுத்திலிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி, “கழுத்தை இறுக்கினால் வலி எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டு சிறுவனைத் தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரத்தில் தனது சுடிதார் துப்பட்டாவால் கிருஷ்ணனின் கழுத்தை இறுக்கியுள்ளார். பின்னர் சிறுவனைத் தட்டிக்கொடுத்து தூங்க வைத்த அவர், தானும் உறங்கச் சென்றுள்ளார். துப்பட்டாவால் கழுத்தை நெரித்ததில் சிறுவன் உயிரிழந்ததை அறியாமல், மறுநாள் காலை எழுப்பியபோதுதான் அவன் அசைவின்றி கிடந்தது தெரியவந்தது.
காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும், மற்றவர்களுக்கு அவன் கொடுக்கும் வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தவே அப்படிச் செய்ததாகவும் சிவரஞ்சனி வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், ஒரு பச்சிளம் சிறுவனைக் கோபத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற காரணத்திற்காக, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் சிவரஞ்சனியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு தாய் தனது சொந்த மகனையே ஆத்திரத்தில் கொன்ற இந்த கொடூரச் சம்பவம் சென்னை மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
