தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத ‘தொங்கு சட்டப்பேரவை’ என்ற நிலையை நோக்கி நகர்ந்துள்ளதால், ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது. இந்தச் சூழலைச் சமாளிக்க, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாகத் திரைமறைவில் தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில், கூட்டணி அமைப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடியான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவியையும், கூடவே சபாநாயகர் பதவியையும் அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாராம். விஜய்யின் தவெக முதலிடத்தில் இருந்தாலும், எடப்பாடியின் இந்த ‘பவர் ஷேரிங்’ நிபந்தனை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுகவின் இந்த அதிரடி நிபந்தனையால் தவெக தலைமை சற்றுத் தயக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதால், எடப்பாடியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா அல்லது மாற்றுத் திட்டத்தைப் முன்வைப்பதா என்பது குறித்து விஜய் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் முடிவு, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத் திருப்பமாக அமையும்.
